ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டபோது அமிர்த கும்பம் அடங்கிய கலசம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்கு தங்கியது. சிவபெருமான் கிராத மூர்த்தி வேடம் தாங்கி ஒரு பாணமெய்தி குடத்தை உடைத்து சிருஷ்டியை துவக்கி வைத்தார். குடம் தங்கிய இடமாதலால் இத்தலம் 'குடமூக்கு' என்று பெயர் பெற்றது. தற்போது 'கும்பகோணம்' என்று அழைக்கப்படுகிறது. மகாமகக் குளத்தின் அருகே அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலே 'குடந்தைக் காரோணம்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'காசி விஸ்வநாதர்' லிங்க வடிவத்தில் காட்சி தருகின்றார். அம்பிகை 'காசி விசாலாட்சி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தினத்தன்று இக்கோயில் சுவாமி மகாமக குளத்திற்கு எழுந்தருளுவார்.
கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பது தீர்த்தங்களும் நவ கன்னியர்களாக மாறி இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். அவர்களின் திருவுருவங்கள் இங்கு உள்ளன.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|